
தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் முதல்வரை எதிர்பார்த்து எதிர்பார்ப்போடு காத்துள்ளதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆசிரியர் நியமனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசும்போது, "அரசு பள்ளிகளில் பல காலிப்பணியிடங்கள் இருப்பதால் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவரின் நலனே முக்கியம் என்றும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆசிரியர் குறைகளை ஆய்வு செய்ய சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தற்காலிக ஆசிரியர்கள், தேர்வு எழுதியும் பணி பெறாதவர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் இணை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு, "ஆசிரியர்களின் கோரிக்கைகள் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், சில பிரச்சினைகள் நிர்வாக ரீதியாகவும், சில பிரச்சனைகள் நீதிமன்றங்களில் உள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்ற தீர்வுகளை கண்டறிய சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படும்" என்று பதிலளித்தார்.
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகனை, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் தண்டபாணி, முருகானந்தம் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில், "பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டு உள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் முதல்வரை எதிர்பார்த்து எதிர்பார்ப்போடு காத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தற்போது வழங்கப்படுகிற ரூபாய் 15 ஆயிரம் சம்பளத்தை வைத்து கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை. வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்வருக்கு பரிந்துரை செய்து காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கவும், தேர்தல் வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கவும், கோரிக்கை வலியுறுத்தவும் ஒரு வாய்ப்பு பெற்றுத் தர பரிந்துரை செய்ய கேட்டு கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் பணிநிரந்தரம் என தவெக தேர்தல் வாக்குறுதி அறிவித்த உடனே நன்றி தெரிவிக்க இன்றைய நமது முதல்வரை தவெக தலைவரை சந்திக்க தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சந்திக்க வேண்டுகோள் வைத்து வருகிறது. இதை கவனித்து முதல்வர் அழைப்பார் என காத்துள்ளோம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:
Post a Comment