Search This Blog

Sunday, September 6, 2026

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவும் ஏ.ஐ; 22 இந்திய மொழிகளில் கற்பிக்க ஏற்பாடு

0 comments
கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக, 22 முதல் 27 இந்திய மொழிகளில் இயங்கும் 4 புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளையும் மாணவர்-ஆசிரியர் செயலிகளையும் சென்னை ஐஐடி-யின் 'போதன் AI' மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய மொழிகளில் கல்விச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி-யில் தொடங்கப்பட்ட 'போதன் ஏ.ஐ' (Bodhan AI) மையம், நான்கு புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. A14பாரத்('AI4Bharat') அமைப்பின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பங்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் பயன்பாடுகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பேச்சு அறிதல் (Speech Recognition), பேச்சு உருவாக்கம் (Speech Generation), இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation) மற்றும் எழுத்து அறிதல் (Optical Character Recognition) ஆகிய நான்கு முக்கிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளன. இவை சுமார் 22 முதல் 27 இந்திய மொழிகளில் செயல்படும் திறன் கொண்டவை. இதற்காக என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் 'Nemotron' திறந்தவெளி மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கென தனித்தனியாக புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய அவசியமின்றி, நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் ஏபிஐ (API) வாயிலாக இதனை நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் ஒரு பகுதியாக 'டியூட்டர்பாட்' (TutorBot) மற்றும் 'டீச்சர் அசிஸ்டன்ட் பாட்' ஆகிய இரு செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 'டியூட்டர்பாட்', 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 22 இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களை மையமாகக் கொண்டு குரல் மற்றும் உரை வடிவில் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறது. அதேபோல, ஆசிரியர்களுக்கான செயலியானது பாடத் திட்டங்கள், பயிற்சித் தாள்கள் மற்றும் தேர்வுகளைத் தயாரிக்க உதவுகிறது. இருப்பினும், செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் முழுமையாக ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி, இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவுப் பயணம் வெறும் தொழில்நுட்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும், அது இந்தியாவின் கலாச்சாரத்தையும் மொழிகளையும் புரிந்து கொள்ளும் தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'பாரத் எடு-ஏஐ ஸ்டாக்' (Bharat EduAI Stack) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, கல்வித் துறையில் தேவையில்லாத மறுவேலைகளைக் குறைத்து, இந்திய மொழிகளுக்கான பொதுவான ஏஐ கட்டமைப்பை உருவாக்க வழிவகுக்கும் என்று போதன் ஏஐ அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் மிதேஷ் காப்ரா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment