இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, "மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி விவரங்களைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2026/06/09/cbse-class-9-three-language-policy-supreme-court-plea-cbse-2026-06-09-15-22-40.jpg)
பள்ளி, கல்லூரிகளில் சாதி விவரம் கேட்கத் தடை: சுற்றறிக்கை அனுப்பியதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத அடையாளங்களைக் குறிப்பிடுவது கட்டாயமில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விக்ரமன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
”தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரம்பக் கட்ட மாணவர் சேர்க்கையின்போது சாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என்று விதிகள் உள்ளன. இருப்பினும், பல தனியார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைப் படிவங்களில் மாணவர்களின் சாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாகக் கேட்கின்றன.
நீங்க விரும்பும் செய்திகள்
இத்தகைய நடைமுறை, மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
எனவே, தமிழகத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பப் படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களைக் கட்டாயமாக சேகரிக்கத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பாகுபாடற்ற சூழலை உறுதிசெய்யத் தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, "மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி விவரங்களைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
”பள்ளிகளைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத அடையாளங்களைக் கட்டாயமாகக் கேட்கக் கூடாது எனத் தெளிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவு
அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்,
”இதேபோன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பள்ளிகளில் சாதி மற்றும் மத அடையாளங்களைக் குறிப்பிட மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான அரசாணையை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் சரியாகப் பின்பற்றுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், சாதி மற்றும் மத அடையாளங்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஏற்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இவ்வழக்கின் மூலம், தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை பெறும்போது சாதி, மத விவரங்களை அளிப்பது விருப்பத்தின் அடிப்படையிலானது மட்டுமே என்பதும், அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.