/indian-express-tamil/media/media_files/2026/07/18/cce-engineering-course-details-tnea-2026-top-colleges-best-engineering-colleges-in-tamilnadu-2026-07-18-10-27-27.jpg)
பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன? துணை கலந்தாய்வுக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்று சுமார் 1.44 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன. இதனைத் தொடர்ந்து துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்தநிலையில், மூன்று சுற்று கலந்தாய்வு முடிவில், எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன? துணை கலந்தாய்வுக்கு எவ்வளவு காலியிடங்கள் உள்ளன? என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜாகிர் உசேன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, பொறியியல் கலந்தாய்வில் மொத்தம் 1,99,528 இடங்கள் இருந்தன. இதில் சிறப்பு ஒதுக்கீட்டில் 950 இடங்கள் நிரம்பின. முதல் சுற்றில் 28,029 இடங்களும், இரண்டாம் சுற்றில் 59,951 இடங்களும் நிரம்பின. மூன்றாம் சுற்றில் 55,365 இடங்கள் மட்டுமே நிரம்பின. ஒட்டுமொத்தமாக 1,44,295 இடங்கள் நிரம்பியுள்ளன. சேர்க்கை சதவீதம் 72.32 ஆகும். சுமார் 55,000 இடங்கள் காலியாக உள்ளன. எனவே துணைக் கலந்தாய்வில் பங்கேற்பவர்களுக்கு இடங்கள் நிச்சயமாக கிடைக்கும்.
சுமார் 25 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 110 கல்லூரிகளில் 90% இடங்கள் நிரம்பியுள்ளன. 187 கல்லூரிகளில் 75% இடங்கள் நிரம்பியுள்ளன. 277 கல்லூரிகளில் 50% இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 150 கல்லூரிகளில் 50%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.