/indian-express-tamil/media/media_files/2026/10/15/doe-2026-10-15-21-41-29.jpg)
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இப்பதிவின் போது மாணவர்களின் பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும், தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து தேர்வுத் தொகையைப் பெற்று, அதனை அக்டோபர் 31-க்குள் அரசுக்குச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள்:
பொதுத்தேர்வு எழுதவுள்ள ஒரு மாணவருக்குத் தேர்வுக்கட்டணமாக ரூ.115 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கட்டாயத் தமிழ் மொழித் தேர்வுக்கான வினாத்தாள் அட்டவணை தயாரிப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியீட்டிற்காகப் பள்ளிகள் சார்பில் ரூ.300 தனியாக இணையவழியில் செலுத்தப்பட வேண்டும்.
கட்டண விலக்கு பெற தகுதியானவர்கள்:
தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிற மொழிகளில் பயிலும் மாணவர்களில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மாற்று மதத்திற்கு மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கட்டண விலக்கு உண்டு. பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் இஸ்லாமியப் பிற்படுத்தப்பட்டோர் (BCM) பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் இக்கட்டண விலக்கு பொருந்தும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடைமுறைகள்:
பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அரசு விதிகளின்படி தேர்வுக்கட்டண விலக்கு வழங்கப்படுகிறது. தேர்வில் சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குழு வழங்கிய மருத்துவச் சான்றிதழ்களைப் பள்ளிகள் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
அரசு வழிகாட்டுதல்களின்படி உரிய சான்றிதழ்களை முறையாகச் சரிபார்த்த பின்னரே பள்ளிகள் மாணவர்களுக்கான கட்டண விலக்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்வுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.










No comments:
Post a Comment