/indian-express-tamil/media/media_files/2026/09/21/emis-portal-tn-schools-government-school-staff-transfer-2026-09-21-11-34-34.jpg)
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ‘திறன் ப்ளஸ்’ திட்டத்திற்கான அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வுகள் அக்டோபர் 21 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடம் மற்றும் கணித திறனை மேம்படுத்தும் விதமாக திறன் இயக்கம் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி, தமிழ், ஆங்கில எழுத்துகள் மற்றும் சொற்களைக் கண்டறிதல், இரண்டெழுத்து மற்றும் மூன்றெழுத்து சொற்களை வாசித்தல் மற்றும் எழுதுதல், ஒரு தொடரை வாசித்தல், எண்களை எழுதுதல், வாய்ப்பாடுகள், இரண்டு இலக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படை கணித செயல்பாடுகள் ஆகியவற்றில், இடர்பாடு கொண்ட மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு பரவலாக வரவேற்பு கிடைத்ததால் தற்போது 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறன் ப்ளஸ் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் என்.லதா மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திறன் ப்ளஸ் திட்டத்தின்கீழ் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறனில் குறைபாடுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாணவர்களின் கற்றல் நிலையை அறியும் அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வுகள் (Baseline Assessment) அக்டோபர் 21 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வானது 40 நிமிடங்கள் வரை நடைபெறும். மொத்தம் 10 வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த தேர்வின் மூலம் எழுத்துகள், சொற்களை கண்டறிவதில் சிரமம் உள்ளவர்கள், வாசித்தல் மற்றும் எழுதுவதில் சிரமம் உள்ளவர்கள், எண்களை எழுதுவதிலும், வாய்ப்பாடுகள் கூறுவதிலும் சிரமப்படுபவர்கள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளில் பின்தங்கியவர்கள் கண்டறியப்படுவார்கள்.
தேர்வுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கு முந்தைய நாள் பள்ளிகள் இதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
தேர்வு முடிந்தவுடன் வகுப்பு ஆசிரியர்கள் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். அதன்பின் தேர்வாகும் மாணவர்களின் பட்டியலை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










No comments:
Post a Comment