*⏲️ லீப் நொடிக்கு விடை: உலக நேரக் கணக்கில் புதிய மாற்றம்!*
_கட்டுரை: ஆர். வெங்கடேஷ், மூத்த பத்திரிகையாளர்_
நேற்றைய நாளைக் குறித்துக்கொள்ளுங்கள். 15 அக்டோபர் 2026. நேரம் தொடர்பான வரலாற்றில் ஓர் மைல்கல் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் லீப் நொடி கிடையாது, லீப் மணிநேரம் மட்டுமே உண்டு. என்ன இது?
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் தொடர்பான பொது மாநாட்டில் (General Conference on Weights and Measures) ஒரு மகத்தான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் விவரமாகச் சொன்னால்தான் புரியும்.
உலகமே, ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம் எனப்படும் யு.டி.சி.யைத்தான் (யுனிவர்சல் டைம்) பின்பற்றி வருவது உங்களுக்குத் தெரியும். நமது இந்திய நேரம் என்பது, யு.டி.சி.யை விட 5.30 மணிநேரம் முன்னதாக இருக்கும். இந்த உலகளாவிய நேரம் என்பது அணு கடிகாரங்களை அடிப்படையாகக் கொண்டது.
பல நூற்றாண்டுகளாக நாம் சூரியனை அடிப்படையாகக் கொண்டுதான் நேரத்தைக் கணித்து வருகிறோம். நமது கோளான பூமியின் சுழற்சியின் அடிப்படையில் நொடிகள், நிமிடங்கள், மணி, நாள் ஆகியவை கணிக்கப்படுகின்றன. ஒரு முறை உலகம் சுற்றி வந்தால், 24 மணிநேரம். அது 1440 நிமிடங்கள். அது 86,400 நொடிகளைக் கொண்டது.
அதாவது, பூமி தன்னைத் தானே சுற்றி வருவதற்கு ஒவ்வொரு நாளும் 86,400 நொடிகளை எடுத்துக்கொள்கிறது என்பது கணக்கு. ஆனால், அது அப்படி நடப்பதில்லை என்பதுதான் யதார்த்தம். பெருங்கடல்களின் நகர்வுகள், புவியீர்ப்பு விசை, பூமியின் மத்தியில் இருக்கும் எரிமலைக் குழம்பின் நகர்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மிக மிக நுண்ணிய அளவில், அதாவது பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதற்குக் கூடுதலாக ஒரு நொடி எடுத்துக்கொள்ளலாம்.
புவியியலாளர்களும் விஞ்ஞானிகளும், அணு கடிகாரத்தின் நேரத்துக்கும் உண்மையான உலக சுழற்சிக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கண்டுபிடித்தார்கள். அதனால், 1972 முதல் கடந்த ஆண்டுவரை 27 முறை, நமது கடிகாரத்தை ஒவ்வொரு நொடி நகர்த்தி வைத்திருக்கிறார்கள்.
ஜூன் 30, 2015 அன்று இரவு 23:59:59 UTCக்கு, நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூடுதல் நொடி சேர்ப்பு கண்முன்னே ஒரு காட்சியாக நடைபெற்றது. சாரா மோராவெட்ஸ் (Sara Morawetz) என்ற கலைஞர், டைம்ஸ் சதுக்கத்தில் கையில் சற்றே பெரிய அளவு ஜால்ராவை வைத்துக்கொண்டு நின்றிருந்தார். அடுத்த நொடி நகர்ந்தபோது, அவர் அந்த ஜால்ராவை இசைத்து ஒலி எழுப்பினார்.
அதாவது, வழக்கமாக 00:00:00 UTCக்கு கடிகார நொடி முள் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்த ஒரு நொடியைத் தவறவிட்டு, அதாவது அணு கடிகாரத்தின்படி ஒரு நிமிடம் என்பது சரியாக 60 நொடிகள் என்ற விதியை மாற்றி, அன்று மட்டும் 23:59:60 என்ற ஒரு விசித்திரமான கூடுதல் நொடி உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு கடிகாரம் 00:00:00 UTCயை எட்டியது. மனிதர்களால் எளிதாகக் கடந்து போக முடிந்த அந்த ஒரு நொடிதான், கணினிகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியது. இந்த நிகழ்ச்சிக்கு 60/61 என்று பெயர். இப்படி சேர்க்கப்படும் ஒரு நொடிக்குத்தான் 'லீப் நொடி' என்று பெயர்.
படிக்கவும், அந்தக் காட்சிகளைப் பார்க்கவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், பிரச்சினை வேறு இடத்தில் இருந்து தோன்றியது. இதுபோன்று உலகம் சற்றே பின்தங்கிப் போவதை ஒவ்வொரு முறையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? அதற்கு ஏற்ப, கூடுதல் நொடி சேர்க்க வேண்டுமா என்று உலகில் உள்ள பல்வேறு தரப்பினரும் வாதம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள்தான் போர்க்கொடி தூக்கின. அவர்களுடைய கணினிகள், சர்வர்கள், இணையத் தரவுகள் அனைத்தும் இந்த அணு கடிகாரம் காட்டும் நொடியைப் பின்பற்றித்தான் நடைபெறுகின்றன. ஒவ்வொரு முறையும் கூடுதலாக ஒரு நொடி சேர்த்தால், அந்த நொடியைக் கணினிப் பொறியியலில் எங்கே போய்ச் சேர்ப்பது? எப்படிச் சேர்ப்பது?
இந்த ஒரு நொடிப் பிரச்சினையைச் சமாளிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் 'கிளாக் ஸ்மியரிங்' (Clock Smearing) என்ற ஒரு தந்திரத்தைக் கையாண்டன. அதாவது, லீப் நொடி வரும் நாளில், திடீரென ஒரு நொடியைக் கூட்டுவதற்குப் பதிலாக, அந்த நாளின் 24 மணிநேரமும் ஓடும் நொடிகளோடு தலா சில மில்லி நொடிகளைக் கூட்டி, அந்த ஒரு நொடியை 'அப்படியே மெதுவாகக் கரைத்து' விடுவார்கள். ஆனால், இந்தத் தற்காலிக வேலைகளும் பெரிய நெட்வொர்க்குகளில் பல சிக்கல்களை உண்டாக்கின.
அதுமட்டுமல்ல, பல்வேறு நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும், குறிப்பாக 'டைம்-ஸ்டாம்ப்' தேவைப்படும் இடங்களில் எல்லாம் இந்த லீப் நொடி பெரிய இம்சையைக் கொடுத்து வந்தது. 2012இல் இதுபோல் ஒரு 'லீப் நொடி' சேர்க்கப்பட்டபோது, புகழ்பெற்ற ரெட்டிட், லிங்க்டு இன் உள்ளிட்ட வலைத்தளங்கள் 'க்ராஷ்' ஆயின. விமானச் சேவையே தள்ளிவைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் உலக அளவில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் விவாதிக்கத் தொடங்கினர். இந்த லீப் நொடியைச் சேர்ப்பதை விட்டுவிட்டு, ஏன் 'லீப் மணிநேரம்' (Leap Hour) சேர்த்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தனர். அதாவது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகுதான் ஒரு மணிநேரத்தைக் கூடுதலாகச் சேர்ப்பதற்கான வாய்ப்பு வருமோ என்னவோ? அதுவரை, எந்தத் தொந்தரவும் இல்லாமல், இப்போது இருக்கும் உலகளாவிய நேரத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதினர்.
அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கலாமா, வேண்டாமா என்பதற்கான கூட்டம்தான் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. ஆம், இனிமேல் லீப் நொடி வேண்டாம், ‘லீப் ஹவர்' சேர்த்துக்கொள்ளலாம் என்று பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பெரிய பலன் அடையப் போவது தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப, நிதிப் பரிவர்த்தனை சார்ந்த துறைகள்தான். இந்த மாற்றம் 20 மே 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்பிறகு, அணு கடிகார நேரத்துக்கும் பூமியின் சுழற்சி நேரத்துக்கும் இடையிலான வேறுபாடு ஒரு மணிநேரம் வரை அதிகரிக்க அனுமதிக்கப்படும். இனிமேல் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குத் துளித் துளியாக நொடிகளைச் சேர்த்துக்கொண்டிருக்க வேண்டிய இம்சை இல்லை.
இன்னொரு பக்கம் வேறொரு கோணம் வைக்கப்படுகிறது. வருங்காலத்தில் இத்தகைய நேரம் என்ற ஒரு தேவையே ஏற்படாமல் போய்விடலாம். கணினிகளோ, இதர கருவிகளோ, உலகளாவிய நேரத்தைப் பின்பற்ற வேண்டிய தேவையே ஏற்படாமல் போய்விடலாம். வருங்கால சந்ததியினர் அன்று தமக்குத் தேவைப்பட்டால், நொடிகளையோ, நிமிடங்களையோ, மணியையோ சேர்த்துக்கொள்ளட்டும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
என்ன ஒன்று, வானியல் வல்லுநர்களும் புவியியலாளர்களும் மட்டும் இந்த முடிவினால் கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளனர். அணு கடிகாரத்தின் நேரத்திற்கும், பூமியின் உண்மையான சுழற்சி நேரத்திற்கும் இடையே உள்ள இடைவெளி இனி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை அப்படியே அதிகரிக்க அனுமதிக்கப்படும். இதனால், விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களையும் கோள்களையும் துல்லியமாகக் கண்காணிக்க டெலஸ்கோப்புகளைத் திருப்பும் வானியலாளர்கள், இனி தங்களின் மென்பொருள்களில் பிரத்யேகமான கணக்கீடுகளை (Mathematical Formulas) உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், கொஞ்சம் மண்டையிடிதான்.
ஆனால், மனிதகுலம் இயற்கையின் சுழற்சியை விட்டுவிட்டு, முற்றிலும் டிஜிட்டல் மற்றும் அணு தொழில்நுட்ப உலகிற்குள் முழுமையாகத் தடம் பதித்துவிட்டது என்பதை உணர்த்தும் ஒரு மகத்தான நாள் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
• கருத்துகள் பகிர: ஆர். வெங்கடேஷ்










No comments:
Post a Comment