JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, October 22, 2018

ஊட்டி அருகே அவலாஞ்சியில் பூத்து குலுங்கும் சிறு குறிஞ்சி பூக்கள்

ஊட்டி அருகே அவலாஞ்சியில் வெண்மை மற்றும் ஊதா நிறத்தில் பூத்துள்ள சிறுகுறிஞ்சி மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. 



நீலகிரியில் ஒரு ஆண்டு முதல் 30 ஆண்டு வரை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இருந்தாலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் சிறப்பாக கருதப்படுகிறது. ஒரு பகுதியில் பூக்கும் குறிஞ்சி மலர் மீண்டும் அதே இடத்தில் பூப்பதில்லை. 

இந்தாண்டு நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி (ஸ்டிராபிலான்தஸ் குந்தியானா) மலர்கள் அதிகளவில் பூத்து வருகின்றன. கீழ்கோத்தகிரி பகுதி, கல்லட்டி, சோலாடா மலைச் சரிவு, ஊட்டிமஞ்சூர் சாலை, ஊட்டி கெத்தை சாலையில் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வரும் டிசம்பர் இறுதி வரை இந்த மலைப் பகுதிகளில் நீலக் குறிஞ்சி மலர்களைக் காண முடியும்.






இந்நிலையில், தற்போது அவலாஞ்சி, ஊட்டிகூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் மற்றும் ஊசிமலை இடையே ஸ்டிராபிலான்தஸ் நியோஸ்பர் என்ற சிறு குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. வெண்மை மற்றும் ஊதா நிறத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன.

இம்மலர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் பிரதீப் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தானது சிறு குறிஞ்சி மலர்கள்.

இவை 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டவை. நீலகிரி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இம்மலர்களை அதிகம் காணலாம், என்றார்.