Friday, October 5, 2018

தகுதி இல்லாதவர்கள் பேராசிரியர்களாக நியமனம்: நடவடிக்கை எடுப்பதில் கருணை காட்டக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

சட்டப்பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரிகளின் தகுதி இல்லாத நபர்களை பேராசிரியர்களாக நியமிக்க காரணமான அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் கருணை காட்டக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சட்டப்பல்கலைக்கழகம், அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வர், துறை தலைவர், பேராசிரியர், உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி என்ன?.

தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் அந்த கல்வித் தகுதியுடன் உள்ளனரா? என்பது உள்ளிட்ட பல விவரங்களை கேட்டு கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘சட்டபல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் தகுதிகளை பரிசீலிக்க குறைதீர்க்கும் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள் ளது. அந்த குழு, விசாரணை நடத்தி வருகின்றன. அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக சட்டக்கல்வி இயக்குனரகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்’ என்று கூறினார்.



இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குறை தீர்க்கும் குழு தன்னுடைய விசாரணையை விரைவாக நடத்தி முடித்து, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவேண்டும். அதில் தகுதி இல்லாதவர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களை நியமனம் செய்ய காரணமாக இருந்த அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் எந்த ஒரு கருணையும், இரக்கத்தையும் யார் மீதும் காட்டக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.