
தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் நீட் தேர்வு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 413 மையங்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், விடியோ கான்ஃபரன்சிங் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. பிளஸ் 2 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.21) வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
22-ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வு சிறப்பு வகுப்புகள் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே நடைபெற்று வரும் நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களை இந்தச் சிறப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பான சுற்றறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.
No comments:
Post a Comment