Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 24, 2019

அறிவார்ந்த சமுதாயத்தை ஆசிரியரால்தான் உருவாக்க முடியும்


வாசிக்கிற பழக்கமுடைய ஆசிரியரால்தான் அறிவார்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு பொதுநூலகத் துறை பணியாளர் கழகத்தின் மாநிலப் பொருளாளரும், கெங்கவல்லி கிளை நூலகருமான சோ. நீலமேகம் தெரிவித்தார். உலக புத்தகத் தினத்தையொட்டி, கெங்கவல்லி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சோ. நீலமேகம் மேலும் பேசியது:-


கணினி, செல்லிடப்பேசி, இணையதள வசதிகளைப் பெற்று வளரும் இன்றைய தலைமுறையினரிடம் புத்தகங்களை வாசிக்கிற பழக்கம் குறைந்திருக்கிறது. நல்ல எழுத்தாளரின் அனுபவம், ஞானம், சிந்தனைகள்தான் நல்ல நூல்களாக உருமாற்றம் பெறுகிறது. நல்ல நூல்களே தலைமைப் பண்பையும், ஆளுமைத் திறனையும் வளர்க்கும். வாசிக்கிற பழக்கமுடைய ஆசிரியரால்தான் அறிவார்ந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.


ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்கள் வாசிக்கிற பழக்கத்தை தங்களது அன்றாடக் கடமைகளில் ஒன்றாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அன்பிற்குரியவர்களுக்கு நூல்களைப் பரிசளியுங்கள். நூலகத்தில் உறுப்பினராகச் சேருங்கள் என்றார். விழாவுக்கு நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ந. விசாலாட்சி தலைமை வகித்தார். இளநிலை விரிவுரையாளர் ரா. ஸ்ரீதர், ஊர்ப்புற நூலகர் சாமிநாதன், மாணவர் தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.