ஆசியாவின் மிகப்பெரிய அணை... இயற்கை எழில் மிக்க இடுக்கி...!


கேரள மாநிலத்தில் மிக பெரிய இரண்டாவது மாவட்டம் என்றால் அது இடுக்கி தான். இடுக்கி மாவட்டம் கவர்ச்சிகரமான இயற்கை சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய அணை இடுக்கி அணை தான். பசுமையை போர்த்தி கொண்டு நீண்ட உயரத்தில் நிற்கும் சிகரங்களை கிரீடமாக சுமந்தபடி இயற்கை அன்னை தரிசனம் தரும் இந்த பிரதேசத்தில்தான் இந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஆனைமுடி சிகரம் உள்ளது.

அது மட்டுமல்லாமல் உலகிலேயே இரண்டாவது பெரிய வில் போன்ற வளைவுத் தடுப்பை கொண்ட அணை (வில்லனை) தான் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேக்கு, கருங்காலி, சந்தனமரம், யானைத்தந்தம் மற்றும் மயில் தோகை போன்ற அரிய பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய வணிகக்கேந்திரமாக இடுக்கிப்பகுதி உள்ளது. கற்கால நாகரிகம் இந்த வனப்பகுதியில் செழிப்புடன் விளங்கியிருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.



சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் :
இதில் தொடப்புழயாறு, பெரியாறு மற்றும் தலயா போன்ற ஆறுகளும் இடுக்கி மாவட்டத்தில் பாய்கின்றன. 2000 மீட்டர் உயரம் உள்ள ஆனைமுடியை தவிர்த்து மொத்தம் 13 சிகரங்களும் இடுக்கி மலைப்பிரதேசத்தில் வானோங்கி நிற்கின்றன. இடுக்கியை கேரளாவின் மின்னுற்பத்தி கேந்திரம் என்றே சொல்லலாம். ஏனெனில், மாநிலத்தின் 66 சதவீத நீர்மின்சாரப் பயன்பாடு இடுக்கியிலிருந்தே பெறப்படுகிறது. இடுக்கி வில்லணை, குளமாவு அணை மற்றும் செருதோணி அணை ஆகிய மூன்று முக்கியமான அணைகள் இடுக்கி பகுதியில் அமைந்துள்ளன.



இடுக்கியிலுள்ள முக்கிய மலைவாசஸ்தலமான ராமக்கால்மேடு எனுமிடத்தில் காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. கேரளாவின் முக்கியமான பாசன நீர்த்தேக்கமான மலங்காரா நீர்த்தேக்கத்தில் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம். நேரமும் மனமும் மட்டும் இருந்தால் போதும், இடுக்கியில் பார்த்து ரசிக்க ஏராளமான அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன.



இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் தேக்கடி பகுதியில் பெரியார் தேசிய காட்டுயிர் பூங்கா அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிமலர் சரணாலயத்தில் பல அரிய காட்டுயிர்களும் தாவர வகைகளும் நிரம்பியுள்ளன. இதற்கு அருகிலேயே சின்னார் காட்டுயிர் சரணாலயம், இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம், ஆனைமுடி சோலை தேசியப்பூங்கா, இரவிகுளம் தேசியப்பூங்கா மற்றும் பம்பாடும் சோலை தேசியப்பூங்கா ஆகிய ஏராளமான வனவிலங்கு பூங்காக்கள் அமைந்துள்ளன.



இந்த வனப்பகுதிகளில் வசிக்கும் அரிய வகை உயிரினங்களான நீலகிரி வரையாடு (மலை ஆடு) , நீலகிரி கருப்புப்புறா, கவுர் எருமை, ஊதா தவளை, புலி, ராட்சத சடை அணில், யானை, சாம்பார் மான் மற்றும் நீலக்குறிஞ்சி ஆகியவற்றை காண்பதற்காகவே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காட்டுயிர் ஆர்வலர்கள் வருகை தருகின்றனர். இவற்றில் 'வரையாடு' தமிழ்நாட்டின் அரசு விலங்கு என்பது பலராலும் அறியப்படாத ஒரு தகவலாகும். தட்டேக்காட் பறவைகள் சரணாலயம் அல்லது சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் பல்வகை பறவைகள் மட்டுமல்லாது அரிய ஊர்வன வகைகள் மற்றும் விலங்குகளையும் பார்க்கலாம்.



இங்கு கிழக்கு வளைகுடா ஆந்தை எனப்படும் ஒரு அழிந்து வரும் ஆந்தை இனம், மலபார் சாம்பல் இருவாட்சி, இளசிவப்பு மூக்கு பனங்காடை, சிவப்பு தொண்டை குக்குறுவான், பாம்புப்பருந்து, இந்திய மலை இருவாட்சி மற்றும் நீலச்சிட்டு போன்ற அரிய வகை பறவைகள் வசிக்கின்றன. இடுக்கியின் இயற்க்கை அழகை கண்டத்தும் இயற்கையின் படைப்புகளில் இப்படியுமா என்று அசந்து போவீர்கள். மலையேற்றத்தில் விருப்பமுள்ள சாகச பயணிகளாக இருப்பின் கல்வாரி மலை, குளமாவு, பல்குலமேடு மற்றும் நெடுங்கண்டம் மலை போன்றவற்றிற்கு பயணம் மேற்கொள்ளலாம். இயற்கையை எளிமையாக ரசிக்க விரும்புவோர் ஹில் வியூ பார்க், தும்பாச்சி கல்வேரி சமுச்சாயம் மற்றும் பைனாவு போன்ற எழில் நிறைந்த தோட்டப்பூங்கா ஸ்தலஙள் மற்றும் மலைக்காட்சி தளங்களையும் சுற்றிப்பார்க்கலாம்.



இடுக்கி மாவட்டத்தில் உள்ளது இடுக்கி அணை குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது இந்த அணை பார்ப்பதற்க்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது. வளைவு வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இந்த இடுக்கி அணை ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் இருந்து இடுக்கி மாவட்டம் மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்படுகிறது.



செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும். சுற்றுலா வரும் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் அணையின் அழகை கண்டு ரசிக்கின்றனர். அணையின் அந்த அழகைக் காண வேண்டுமா, வாருங்கள் இடுக்கி மாவட்டத்திற்கு.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel