
பசுமைப் பள்ளிகள் எனும் பெயரில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, இயற்கையை வளர்த்தெடுக்கும் கல்வி அதிகாரி.
"என் சின்ன வயதில் நிறைய மரங்கள் இருந்த இடங்களில் எல்லாம், இப்போது ஒரு மரத்தையும் பார்க்க முடியவில்லை" என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார் விழுப்புரம் மாவட்டக் கல்வி அதிகாரி முனுசாமி. பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டும் செய்திகளைப் படித்திருப்போம். ஆனால், மாவட்டக் கல்வி அதிகாரியே முழு வீச்சோடு இந்தப் பணியை மேற்கொள்கிறார் என்பது ஆச்சர்யமானதுதானே!
"எனக்கு சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்தில் உள்ள பூலாமேடு கிராமம். எங்க ஊரில் நிறைய மரங்கள் இருக்கும். அதோட வளர்ந்தவன் நான். இப்போ ஊருக்குப் போனால், மரங்களே ரொம்ப ரொம்பக் குறைஞ்சிபோயிருந்துச்சு. சின்ன வயசிலிருந்தே மரங்கள் வளர்க்கிறதுல ஆர்வம் இருந்துச்சு. சி.இ.ஓ ஆனதும் நிறைய பள்ளிகளுக்குப் போறதுக்கான வாய்ப்பு கிடைச்சுது. சரி, நம்ம எல்லைக்குட்பட்ட பள்ளிகள்ல மரக்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லலாமேனு ஒரு யோசனை வந்ததுச்சு. கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளா பள்ளிகள்ல கொண்டாடிட்டு வர்றோம். இந்த வருஷத்துல அந்த நல்ல நாள்லேருந்தே மரக்கன்று வளர்க்கிறதைத் தொடங்க நினைச்சேன். ஏன்னா, இயற்கையைக் காப்பாற்ற அடுத்த தலைமுறையைத் தயார் படுத்துறதுதானே சரியா இருக்கும்.
செஞ்சி அரசு ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்லதான் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இரண்டு பள்ளிகளுக்கும் சேர்ந்து 4,500 மரக்கன்றுகளைக் கொடுத்தேன். தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில 2,800 மரக்கன்றுகள் கொடுத்தேன். ஒரு சில பள்ளிகள்ல மரக்கன்றுகளைக் கொடுத்திட்டு நின்னுட கூடாதுன்னு 'பசுமைப் பள்ளிகள்'னு இதற்குப் பெயர் வைத்து பல பள்ளிகளுக்குப் பரவலாகக் கொண்டுபோகிறேன். நான் நேரடியாகப் போனது 28 பள்ளிகள்தான் என்றாலும், ஆசிரியர்கள் மூலமா வழங்கியதுன்னு கணக்குப் பார்த்தா இன்னிக்கு வரை 37,000 மரக்கன்றுகளைக் கொடுத்திருக்கிறேன். இந்த வருஷ டிசம்பருக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடணும்னு எண்ணம்.










No comments:
Post a Comment