Search This Blog

Sunday, December 11, 2022

பாடநூல் சேதமடைந்த மாணவா்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை

0 comments
பலத்த மழை காரணமாக மாணவ, மாணவிகளின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றை புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகள் பாதிப்படைந்தன. மேலும், பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தன. இதனால் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சான்றிதழ்கள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக மாணவா்கள், பெற்றோா்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘புயல் மற்றும் கனமழையால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாடநூல்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் எதுவும் சேதமடைந்திருந்தால் அவா்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும். இதன் விவரங்கள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

அதேபோல், கல்வி ஆவணங்கள் ஏதும் சேதமடைந்தால் மாற்றுச் சான்றிதழ்கள் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீா், முறிந்து விழுந்த மரங்களை உடனே அகற்றவும் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மாற்று வகுப்பறைகளில் மாணவா்களை அமர வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

No comments:

Post a Comment