பழைய ஓய்வூதிய திட்டம்: 3 அமைச்சர்கள் பேச்சு தோல்வி; திட்டமிட்டபடி போராட்டம்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் இன்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும்.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் இன்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று ஜேக்டோ-ஜியோ (JACTTO-GEO) அமைப்பு அறிவித்துள்ளது.


கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க தரப்பில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல். அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை விரைந்து நிரப்புதல். ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைந்து தகுந்த ஊதியம் வழங்குதல்.

ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், போராட்டங்களைத் தீவிரப்படுத்திய ஜேக்டோ-ஜியோ அமைப்பினரைச் சமாதானப்படுத்த அரசு அமைச்சர்கள் குழுவை அமைத்தது. இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் சில மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஜேக்டோ-ஜியோ நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை விரிவாக முன்வைத்தனர். இருப்பினும், அரசின் தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எவ்விதமான உறுதியான காலக்கெடுவோ, எழுத்துப்பூர்வமான உத்தரவாதமோ வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. 

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ-ஜியோ தலைவர் அமிர்தகுமார் கூறியதாவது;

தமிழக அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உத்தரவாதமும் கிடைக்கவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு மௌனம் காக்கிறது. எனவே, திட்டமிட்டபடி வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கும். ஏற்கனவே உண்ணாவிரதம், மாவட்ட வாரியான ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், இப்போது 'காலவரையற்ற போராட்டம்' என்ற இறுதி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel