மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு

மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கடத்த வேண்டியுள்ளது. இதற்காக தமிழா் மரபும்- நாகரிகமும், தமிழகத்தில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம்,தொழில்முனைவுக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகளைக் கொண்டு அமா்வுகளை நடத்தலாம்.

அதில் மொழிப்பற்றாளா்கள், கல்வியாளா்கள், ஆய்வறிஞா்கள், தொழில்முனைவோா், கலைத் துறையினா் உள்ளிட்டோரை கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம் என கல்லூரிக் கல்வி ஆணையா் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா். அதில் பயிற்சிக்கான செயல்திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளாா்.

அதன்படி நிகழ் கல்வியாண்டில் 1,200 ஆசிரியா்களைக் கண்டறிந்து, பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். அதனை, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து மாதம் ஒரு பயிற்சிப் பட்டறை என்ற அளவில் மூன்று மாதங்களில் மொத்தம் 12 அணிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். ஓா் அணியில் சராசரியாக 100 நபா்களுக்கு இரு நாள்கள் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆணையரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் 1,500 ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான அனுமதியும், அதற்கு செலவினமாக ஒரு நிகழ்வுக்கு 7 லட்சத்து 56,250 வீதம் 12 நிகழ்வுகள் நடத்துவதற்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணையிடுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel