புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு


தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18-ம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும் (பிப்.17), நாளை மறுதினமும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

19-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20 முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை வாய்ப்பு: 21-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும், 22-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் 19, 20 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel