ஆன்லைன் வழியில் விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்தாண்டு முதல், 'ஆன்லைன்' வழியாக மதிப்பீடு செய்ய உள்ள நிலையில், அதற்கேற்ப போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தாண்டு, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், 31,000 பள்ளிகளைச் சேர்ந்த, 18.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள், 120 பாடங்களுக்கு தேர்வுகள் எழுதுகின்றனர்.

அவர்களின் விடைத்தாள்கள் குறைந்தபட்சம், 6,000 பள்ளிகளில் உள்ள மையங்களில், 'ஆன்லைன்' வாயிலாக திருத்தப்பட உள்ளன. இதுவரை, மாணவர்களின் விடைத்தாள்களை நேரடியாக கையில் எடுத்து படித்து, அதிலேயே மதிப்பெண்களை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. தற்போது, விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆசிரியர்களின் கணினிக்கு அனுப்பப்படும். கணினி திரையில் அதை படித்துப் பார்த்து, வழங்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மதிப்பெண்களை வழங்க வேண்டும். இந்த முறை எளிதாகவும், விரைவாகவும் முடியும் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அதேசமயம், தேர்வு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இந்த முறை பற்றி சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வாரியம், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஆன்லைன் வழியாக திருத்துவது குறித்து பயிற்சி வழங்கியது. ஏற்கனவே, மாணவர்களுக்கு தேர்வுப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களுக்கு, அந்த பயிற்சியில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: காலத்துக்கு ஏற்ப, இடைநிலை கல்வி வாரியம், 'டிஜிட்டல்' முறைக்கு மாறுவதில் தவறில்லை. அதேசமயம், அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலும், இணையதள இணைப்புடன் கூடிய, நல்ல கணினிகள் இருக்குமா என்பது சந்தேகமே. மேலும், அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்களுக்கு, விடைத்தாள்களில் எழுதப்பட்டு இருப்பதை படித்துப் பார்த்து, மதிப்பெண் வழங்கும் முறை தான் பழக்கமாகி இருக்கிறது. திடீரென கணினி வழியில் படிப்பதும், அவற்றை பெரிதாக்குவதோ, சிறிதாக்குவதோ இயலாத காரியம். விடைத்தாள்களை ஸ்கேன் செய்வோர், ஏதாவது ஒரு பக்கத்தை விடுவதற்கும், பென்சிலால் வரையப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக ஸ்கேன் செய்யாமல் விடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் சி.பி.எஸ்.இ., வாரியம் தீர்வு காண வேண்டும். அப்போது தான் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel