அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு முதன்முறையாக எளிய வினாத்தாள்கள்: தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் முதன்முறையாக எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் மூலம் ஆண்டு இறுதித் தேர்வை நடத்தத் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு இறுதித் தேர்வில் அவர்களுக்கு எனத் தனித்துவமான எளிய வினாத்தாள்களை வழங்கத் தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை அமலில் உள்ள ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப அரும்பு, மொட்டு, மலர் ஆகிய நிலைகளில் ஏற்கனவே பயிற்சிக் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அவர்களின் கற்றல் நிலையைச் சரியாக மதிப்பீடு செய்யும் வகையில், எளிமைப்படுத்தப்பட்ட வினாத்தாள்கள் மூலம் ஆண்டு இறுதித் தேர்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு எனத் தனியாக வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தச் சிறப்பு வினாத்தாள்களைப் பெற வேண்டிய தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை, அந்தந்தப் பள்ளிகள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தேர்வு மற்றும் மதிப்பீட்டுப் பணிகளின் போது சந்தேகம் எழுந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் சிறப்புப் பயிற்றுநர்களின் ஆலோசனைகளையும் உதவியையும் ஆசிரியர்கள் நாடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாகவும், தேர்வை அவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் விதமாகவும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel