தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சி நடத்த தடை

தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள், பிரிவினையைத் தூண்டும் நிகழ்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளில் சாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


இதை தவிர்ப்பதற்காக தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையைத் தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல், பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம் ஆகியவற்றை நடத்த பயன்படுத்தக் கூடாது.

கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள் போன்ற செயல்பாடுகள், அவை மதம், அரசியல் சாராமல், பள்ளியின் நேரடி மேற்பார்வையில் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், இதுசார்ந்து அரசால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் பள்ளி வளாகங்களில் தொடர்ந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel