ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் ஏப்.16-ம் தேதி முடிவடைகின்றன.
இதையடுத்து, 17-ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என விடப்படுகிறது. அதே வேளையில், வரும் 25-ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை பணி, நிர்வாகப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய பாடநூல்கள் அறிமுகம்
பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான (2026-27) வகுப்பு ஜூன் 1-ம் தேதி தொடங்கும். வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 3-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3 வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சி அளிக்கப்படும்.
எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும் ஜூன் 4-ம் தேதி முதல் வகுப்பு நடைபெறும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











No comments:
Post a Comment