அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - Orders

சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இவ்விதிகளின் படி எந்த ஒரு அரசு ஊழியரும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது, இது தொடர்பாக, அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உருளையன்பேட்டை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் பரிந்துரையில் அவ்வூழியரை கல்வித்துறை துணை இயக்குனர் (பெண்கள்) அவர்கள் பணியிடை நீக்கம் செய்து உத்திரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் நிகழ்வுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் மேலும் ஐந்து ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ செயல்பட்டால் அவர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாக கருதப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel