Subscribe Us

Monday, August 31, 2026

பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைகிறதா? கலந்தாய்வில் முடங்கிய 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள்

TNEA 2026 பொறியியல் கலந்தாய்வின் 3-வது சுற்று முடிவில் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் குறிப்பிட்ட கல்லூரிகளையே மாணவர்கள் தேர்ந்தெடுத்ததால், சுமார் 52,000 இடங்கள் காலியாக உள்ளன.


தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) மூன்றாம் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறித்து ‘கரியர் கைடன்ஸ் சுரேஷ் சீதாராமன்’ (Career Guidance Suresh Seetharaman) தனது யூடியூப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பொறியியல் சேர்க்கையில் எதிர்பாராத மாற்றம்: காலியாகும் 52,000 இடங்கள்!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் மொத்த இடங்களான 1,81,436 பொறியியல் சேர்க்கை இடங்களில், முதல் சுற்றில் 24,674 இடங்களும், இரண்டாம் சுற்றில் 49,804 இடங்களும் நிரம்பின.

மூன்றாம் சுற்று முடிவில் 56,294 மாணவர்கள் சேர்க்கை ஆணை பெற்றிருந்தாலும், இறுதிச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கல்லூரிகளில் சேரும் நடைமுறைகளின் முடிவில் சுமார் 52,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே இருக்கும் எனத் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நீங்க விரும்பும் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டு நிலை

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 14,642 7.5% இலவச இட ஒதுக்கீட்டில், முதல் சுற்றில் 2,177 மாணவர்களும், இரண்டாம் சுற்றில் 9,967 மாணவர்களும் சேர்வத உறுதிசெய்தனர். ஆனால் மூன்றாம் சுற்றில் 1,610 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.

அரசு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்ட போதிலும், சுமார் 888 இடங்கள் நிரம்பாமல் காலியாகவே உள்ளன. இது சுமார் இரண்டு சிறிய பொறியியல் கல்லூரிகளின் மொத்த சேர்க்கை அளவுக்குச் சமமாகும். கட்டணம் இல்லை என்றாலும், தரமான உள்கட்டமைப்பு மற்றும் கற்பித்தல் வசதிகள் இல்லாத கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் தயக்கம் காட்டுவதையே இது உணர்த்துகிறது.

சாய்ஸ் ஃபில்லிங்கில் குறைந்த பங்கேற்பு: பின்னடைவுக்கான காரணங்கள்

மூன்றாம் சுற்று தொடங்கும் முன் 1,06,583 இடங்கள் காலியாக இருந்தன. இதில் 68,640 மாணவர்கள் மட்டுமே சாய்ஸ் ஃபில்லிங் பங்கேற்பிற்கு வந்தனர். விண்ணப்பித்திருந்தவர்களில் சுமார் 37,943 மாணவர்கள் விருப்பமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கவே முன்வரவில்லை.

மேலும், சாய்ஸ் ஃபில்லிங் செய்த பிறகும் 12,347 மாணவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்காமல் வெளியேறியுள்ளனர்.

மாணவர்கள் பொறியியல் சேர்க்கையில் இருந்து விலகுவதற்குப் பல முக்கியக் காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன:

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (Deemed Universities): பல மாணவர்கள் கலந்தாய்விற்கு முன்பாகவே தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருப்பது.


நிர்வாக ஒதுக்கீடு (Management Quota): முன்னதாகவே கல்லூரிகளில் நேரடி நிர்வாக ஒதுக்கீட்டில் இடங்களை உறுதிசெய்து கொண்டது.

கல்வித் தரம் மற்றும் திறன் பயிற்சி: வெறும் தியரி கல்வியை மட்டும் வழங்காமல், தற்போதைய தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப திறன் சார்ந்த பயிற்சிகள் (Skill-based education) மற்றும் நல்ல வேலைவாய்ப்பை (Placements) வழங்கும் முன்னணி கல்லூரிகளை மட்டுமே மாணவர்கள் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

துணைச் சேர்க்கைக்கு (Supplementary Counselling) வாய்ப்பு

தற்போது வரை தற்காலிக ஒதுக்கீட்டை (Provisional Allotment) 48,501 மாணவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், மேல்நோக்கி நகர்வு (Upward Movement) விருப்பத்தில் 6,183 மாணவர்கள் மட்டுமே காத்திருக்கின்றனர். ஆகஸ்டு 31-ஆம் தேதிக்குப் பிறகே மாணவர்களின் சேர்க்கை பற்றிய இறுதிப் புள்ளிவிவரங்கள் தெளிவாகத் தெரியும்.

இந்த மூன்றாம் சுற்றின் முடிவில் உருவாகும் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள், அடுத்து வரும் துணைச் சேர்க்கை (Supplementary Counselling) மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed