Search This Blog

Wednesday, September 9, 2026

காலாண்டு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம்; தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0 comments
வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் – கல்வித் துறை


தொடக்கக் கல்வித் துறையில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலாண்டு அல்லது முதல் பருவத்திற்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு / முதல் பருவ மதிப்பீடு தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்து அச்சிடுதல், நகலெடுத்தல், காகிதம் மற்றும் அச்சுப்பொறிக்குரிய டோனர் செலவினங்களுக்கு தேவையான நிதி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு / முதல் பருவ மதிப்பீடு தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

மேற்படி தேர்வு கால அட்டவணையில் தெரிவித்தபடி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலாண்டு / முதல் பருவ மதிப்பீடு தேர்வு நடத்துவதற்கு தேவையான வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டினை மேற்கொள்ள பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

வகுப்பு 1 முதல் 5

மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மாணவர்களின் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் பாடவாரியாக உரிய எண்ணிக்கையில் வினாத்தாள்களை நகலெடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிட வேண்டும்.

வினாத்தாள்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களின் TN EMIS என்ற உள்நுழைவில் 08.09.2026 முதல் 11.09.2026 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் இணைப்பு 1-இல் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நகலெடுத்தல் வேண்டும்.

நகலெடுக்கப்பட்ட வினாத்தாள்களை, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்பு வாரியாக, பாட வாரியாக மற்றும் பயிற்று வழி வாரியாகப் பிரித்து தனித்தனி A3 foolscap size உறைகளுக்குள் வைத்து அவ்வுறையின் மீது பின்வரும் விவரங்களை எழுதி ஒட்டுதல் வேண்டும்:

• வகுப்பு

• பாடத்திட்டத்தின் பெயர்

• பயிலும் வழி

அனைத்துப் பள்ளிகளுக்கும் முதல் பருவ மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள்களைப் பாதுகாப்பாக வைத்து முதல் பருவ மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி அன்று நடைபெற இருக்கும் பாடத்திற்குரிய வினாத்தாளை மட்டும் பயன்படுத்தி மதிப்பீட்டினை நடத்திட அறிவுறுத்த வேண்டும்.

வகுப்பு 6 முதல் 8

நடுநிலைப் பள்ளியில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு காலாண்டு / முதல் பருவ மதிப்பீட்டிற்கான வினாத்தாள்களை இணைப்பு 2-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்து மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.

தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 9 மணி முதல் தேர்வு நாள் மதியம் 1.00 மணி வரை அனைத்து நடுநிலைப் பள்ளிகளும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை ஆசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

அனைத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு 2-இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment