பொறியியல் சேர்க்கைக்கான மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், காலியிடங்களை நிரப்ப நடக்கும் துணை கலந்தாய்வுக்கான (Supplementary Counselling) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/09/tnea-engineering-counselling-2025-07-09-21-06-39.jpg)
TNEA 2026: துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 13,000+ மாணவர்கள் போட்டி; மிஞ்சியிருக்கும் டாப் காலேஜ்கள் எவை?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான (TNEA 2026) பொதுக் கலந்தாய்வு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது தொடங்கப்பட்டு உள்ள துணை கலந்தாய்வுக்கான (Supplementary Counselling) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகள் விட இந்த ஆண்டு துணை கலந்தாய்விற்குப் பதிவு செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு (Special Reservation) மற்றும் பொதுப் பிரிவினருக்கான மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவே இத்துணை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
நடப்பு ஆண்டில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சுற்றுகளின் கட்-ஆஃப் விவரங்கள்:
சுற்று 1 (Round 1): 200 முதல் 171.5 மதிப்பெண்கள் வரை
சுற்று 2 (Round 2): 171.5 முதல் 135.75 மதிப்பெண்கள் வரை
சுற்று 3 (Round 3): 135.5 மதிப்பெண்களுக்குக் கீழ் உள்ளவர்கள்
வெளியாகியுள்ள தரவரிசைப் பட்டியலின்படி, துணை கலந்தாய்வில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது. பொதுப் பிரிவு (General Counselling) 13,484 பேர் பதிவு செய்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டில் 4,798 பேரும், தொழிற்கல்விப் பிரிவில் (Vocational) 245 பேரும், தொழிற்கல்விப் பிரிவு 7.5% உள்ஒதுக்கீட்டில் 61 பேரும் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் (BC) - 4,803 மாணவர்கள்
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM) - 594 மாணவர்கள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) - 4,331 மாணவர்கள்
ஆதிதிராவிடர் (SC) - 3,422 மாணவர்கள்
அருந்ததியர் (SCA) - 559 மாணவர்கள்
199 கட்-ஆஃப் மாணவர் வருகை: கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சி
வெளியிடப்பட்டுள்ள துணை கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள மாணவரின் கட்-ஆஃப் மதிப்பெண் 199 ஆகும். முதல் சுற்றிலேயே தலைசிறந்த முன்னணி பொறியியல் கல்லூரிகளில் எளிதாக இடம் பெற்றிருக்க வேண்டிய அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட துணை கலந்தாய்விற்கு வந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் சுற்றுகளில் கல்லூரிகளைத் தேர்வு செய்திருக்க வேண்டிய தகுதி வாய்ந்த சுமார் 3,435 மாணவர்கள் தற்போது துணை கலந்தாய்விற்கு வந்துள்ளனர். இதில் குறிப்பாக, இரண்டாம் சுற்றில் இடம் பெற்றிருக்க வேண்டிய 3,076 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுபவை: உரிய நேரத்தில் பொதுக் கலந்தாய்வுக்குப் பதிவு செய்யாமல் தவறவிட்டது. போதிய விழிப்புணர்வின்றி தவறான முறையில் கல்லூரிகளைத் தேர்வு செய்தது (Wrong Choice Filling). சமூக வலைதளங்கள், சில யூடியூபர்களின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் சில போலி கன்சல்டன்ட்களிடம் ஏமாந்து விரும்பிய கல்லூரி கிடைக்காமல் போனது.
துணை கலந்தாய்வில் சாய்ஸ் ஃபில்லிங் மேற்கொள்ளும் மாணவ-மாணவிகள் மிகுந்த கவனத்துடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிடித்த கல்லூரி மற்றும் விருப்பமான பாடப்பிரிவு (Branch) ஒதுக்கப்பட்டால் மட்டுமே அந்த இடத்தை இறுதி செய்து உறுதிப்படுத்த (Tentative Confirmation / Acceptance) வேண்டும். உங்களுக்குப் பிடிக்காத அல்லது சேர விருப்பமில்லாத இடங்களை உறுதி செய்யாமல் தவிர்த்தால், உங்களுக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள பிற தகுதியான மாணவர்களுக்கு அந்த இடங்களில் சேர வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.