
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 8-வது ஊதியக் குழுவின் (8th Pay Commission) ஊதிய மாற்றம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 8-வது ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த பத்து ஆண்டுகளில் பணவீக்கம் சுமார் 56% அளவுக்கு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் 'ஃபிட்மெண்ட் ஃபேக்டர்' (Fitment Factor) இந்த முறை கணிசமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து, இந்தப் புதிய ஊதியக் குழு 2027-ஆம் ஆண்டின் மத்தியில் அமலுக்கு வரும் எனப் பெரும்பான்மையாக எதிர்பார்க்கப்படுகிறது
ஃபிட்மெண்ட் ஃபேக்டர் என்றால் என்ன? ஒரு அரசு ஊழியரின் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை, புதிய சம்பளமாக உயர்த்துவதற்குப் பயன்படும் ஒரு பெருக்கல் காரணியே 'ஃபிட்மெண்ட் ஃபேக்டர்' ஆகும்.கடந்த 2016-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7-வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, ஒரு மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. அடுத்து ஒரு ஊதியக் குழு 2036-ல் தான் நியமிக்கப்படும் என்பதால், அடுத்த 10 வருடங்களுக்கான குடும்பச் செலவுகளைச் சமாளிக்கக் கூடிய அளவுக்கு, இந்த முறை பெரிய அளவில் ஊதியப் பெருக்கம் இருக்க வேண்டும் என்பது ஊழியர்களின் பிரதான கோரிக்கையாகும்.
தற்போது வெளியாகியுள்ள நிபுணர்களின் குறைந்தபட்ச கணிப்பின்படி, புதிய ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 1.92 ஆக அமையலாம். ஆனால், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வெவ்வேறு விகிதங்களை வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பு 3.00, ஜம்மு காஷ்மீர் ஊழியர் மன்றம் 3.05, தேசிய தபால் அமைப்புகளின் கூட்டமைப்பு 3.25, NC-JCM அமைப்பு 3.83 என்ற அதிகபட்ச எண்ணை கோரியுள்ளது.
எவ்வளவு சம்பளம் உயரும்: இந்த ஃபிட்மெண்ட் ஃபேக்டரின் அடிப்படையில், ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 92% முதல் 283% வரை உயர வாய்ப்புள்ளது. ஃபிட்மெண்ட் ஃபேக்டர் 1.92 ஆக ஏற்கப்பட்டால் 92% உயர்வுடன் புதிய குறைந்தபட்ச சம்பளம் ரூ.34,560 ஆக இருக்கும். 2.86 ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டால்186% உயர்வுடன் அடிப்படைச் சம்பளம் ரூ.51,480 ஆக அதிகரிக்கும். ஒருவேளை, 3.68 ஆக ஏற்கப்பட்டால், 268% உயர்வுடன் ரூ.66,240 ஆக அதிகரிக்கும்.
ஊழியர்களின் பணிநிலையைப் (Level) பொருத்து இந்தச் சம்பள விகிதங்கள் பெருமளவு மாறுபடும். உத்தேச கணிப்புகளின்படி, லெவல் 1 ஊழியர்களுக்கு ரூ.32,000 முதல் ரூ.69,000 வரையிலும், லெவல் 5 ஊழியர்களுக்கு ரூ.53,000 முதல் ரூ.1.11 லட்சம் வரையிலும் சம்பளம் கிடைக்கலாம். அதிகபட்சமாக, லெவல் 18-ல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அடிப்படைச் சம்பளம் ரூ.4.57 லட்சம் தொடங்கி ரூ.9.57 லட்சம் வரை உயரக்கூடும்.
இது தவிர, அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஊதியப் பெருக்கம் இல்லாமல், பணிச் சூழலில் உள்ள சவால்களின் அடிப்படையில் 5 வகையான அடுக்குகள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச சம்பளமாக ரூ.52,600 வழங்க வேண்டும் என்றும் இந்திய ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் (IRTSA) வலியுறுத்தியுள்ளனர்.
8-வது ஊதியக் குழுவின் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரை புதுடெல்லி, ஹைதராபாத், ஸ்ரீநகர், லடாக் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.