சென்னையில் வரும் செப்டம்பர் 23 முதல் 25 வரை தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறவுள்ள 3 நாள் ஏ.ஐ செயலி உருவாக்க கட்டணப் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
/indian-express-tamil/media/media_files/2026/09/18/new-project-11-2026-09-18-17-14-43.jpg)
சென்னையில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” என்ற தலைப்பிலான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 23, 2026 முதல் செப்டம்பர் 25, 2026 வரை 3 நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த முழுநேர பயிற்சி வகுப்புகள் நிறுவன வளாகத்தில் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது புதிய சிந்தனைகளை செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் செயலிகளாக மாற்றும் திறன் பெறுவார்கள். முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் நோ-கோட் மற்றும் லோ-கோட் ஏ.ஐ கருவிகள், பிரசித்தி பெற்ற ChatGPT, Gemini Pro, NotebookLM மற்றும் Lovable போன்ற தளங்களைப் பயன்படுத்தி நேரடி செயலிகளை உருவாக்குவது எப்படி என்று இதில் கற்றுத்தரப்படும். மேலும், ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் முறைகள், ஏ.ஐ வலைத்தளங்கள், தானியங்கி அமைப்புகள் மற்றும் கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளுக்கான பயன்பாட்டு மாதிரிகளை உருவாக்கும் முறைகளும் பயிற்சிகளாக அளிக்கப்பட உள்ளன.
மாணவர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், ஃப்ரீலான்சிங் செய்ய விரும்புபவர்கள் மற்றும் ஆரம்ப நிலை ஊழியர்கள் தங்கள் ஸ்டார்ட்-அப் யோசனைகளை குறைந்த செலவில் சோதித்து பார்க்கவும், சர்வதேச நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் முன் தங்களது பிராஜெக்டுகளை சமர்ப்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும் இந்த பயிற்சி பெரிதும் பயன்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை கணிப்பொறி அறிவும் அவசியமாகும். பயிற்சிக் கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 8668100181, 9360221280 ஆகிய தொலைபேசி எண்களை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரத்தில் தொடர்புகொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி மைய முகவரி:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
ஈக்காட்டுத்தாங்கல்,
சென்னை - 600 032.










No comments:
Post a Comment